உயர்தரப் பரீட்சை; பிரத்யேக வகுப்புக்களுக்கு தடை!
2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என தேர்வுகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்தரப் பரீட்சைக்கான கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரீட்சை கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் இடம்பெறும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடக விளம்பரங்களை வெளியிடுதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாடு முழுவதும் 2,532 தேர்வு மையங்களில் ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது.