கோடிக் கணக்கில் செலவு செய்து கட்டிய தனிவீடுகள்; யாருமற்ற அவலநிலை!
பல கோடி ரூபாய்களை செலவு செய்து கொட்டகலை ஸ்டோனிகிளிப் பகுதியில் கட்டடிய தனி வீடுகள் கடந்த ஒரு வருடகாலமாக யாரும் அங்கு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தனி வீடுகள் ஏழு பேச்சஸ் காணியில், ஒரு வீட்டுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவு செய்து சுமார் 25 வீடுகள் மின்சாரம்,தண்ணீர் பாதை உட்பட அடிப்படை வசதிகளுடன் கடந்த அரசாங்கத்தினால் டிரஸ்ட் (மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ) ஊடாக கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் குறித்த வீடுகள் இதுவரை எவருக்கும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த 25 வீடுகள் பராமறிப்பின்றி ஒருவருட காலமாக பாழடைந்து போய் உள்ளதுடன் தற்போது காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் தொடர்ந்தும் இந்த வீடுகள் எவருக்கும் வழங்காது தாமதிக்கப்படுமானால் இவற்றினை மீண்டும் புனரமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் இதனால் மீண்டும் பொது மக்களின் பணமே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இன்று பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக கொட்டடில்களிலும் பழைமைவாய்ந்த மிகவும் ஆபத்தான தொடர்குடியிருப்புக்களிலும் வாழும் நிலையில் பொது மக்களின் வரிப்பணத்தில் இன்று இவ்வாறு சகல வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய வீடுகள் எவருக்கும் பயன்படாதிருப்பது மிகவும் வேதனைக்குரியது என சமூகஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் குறித்த வீடுகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து வீடுகள் இல்லாது அவதிப்படுவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.





