உங்கள் அடையாளங்களை அழித்துவிடுங்கள்; ஆப்கானின் வீராங்கனைகளிடம் வேண்டுகோள்
ஆப்கான் வீராங்கனைகள் தங்கள் அடையாளங்களை அழிக்கவேண்டும் என்றும் , சமூக ஊடகங்களில்இருந்து தங்களை பற்றிய விபரங்களை நீக்கவேண்டும் எனவும் ஆப்கானிஸ்தானின் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் காலிடா போபல் (Kalida Bhopal) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் தலிபான்கள் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்துள்ளதால் ஆப்கானின் கால்பந்தாட்ட வீராங்கனைகள் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானின் உதைபாந்தாட்ட வீராங்கனைகள் தைரியத்துடன் அச்சமின்றி வெளிப்படையாக செயற்படவேண்டும் என கடந்த காலங்களில் வேண்டுகோள் விடுத்திருந்த காலிடா போபல் (Kalida Bhopal) இம்முறை வேறு மாதிரியான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இன்று நான் அவர்கள் தங்கள் பெயர்களை அகற்றவேண்டும்,படங்களை நீக்கவேண்டும் அவர்களின் பாதுகாப்பிற்காக இதனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் தேசிய அணியின் சீருடை உங்களிடம் இருந்தால் அதனை எரித்துவிடுங்கள் எனவும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும், மகளிர் தேசிய அணியின் வீராங்கனை என்ற அடையாளத்தை அடைவதற்காக துணிச்சலுடன் செயற்பட்ட - முடிந்த அனைத்தையும் செய்த - அதனை சாதித்த நானே இவ்வாறு வேண்டுகோள் விடுப்பது எனக்கே துயரமான விடயம் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கால்பந்தாட்டத்தை எப்படி பெண்கள் தலிபானிற்கு எதிராக எழுச்சி பெறுவதற்கும் பெண்கள் வலுவானவர்கள் என காண்பிப்பதற்கும் பயன்படுத்தினார்கள் என்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
எனினும் 1996 முதல் 2001 வரையான தலிபான் ஆட்சிக்காலத்தின் போது இஸ்லாமிய மத சட்டங்களின் அடிப்படையில் பெண்கள் தொழில்புரிவதை தடை செய்ததுஎன்பதை என்பதை நினைவுகூர்ந்த அவர் தற்போது பெண்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆப்கான் கால்பந்தாட்ட வீராங்கனைகள் மாத்திரமல்ல செயற்பாட்டாளர்களும் இதே நிலையில் உள்ளனர், பாதுகாப்புகோருவதற்கு எவருமில்லை, ஆபத்தின் போது உதவுமாறு கோருவதற்கு எவருமில்லை எனவும் அவர் கூறினார்.
நாடொன்று வீழ்ச்சியடைவதை நாங்கள் காண்கின்றோம் என்றும், அவர்கள் எந்த வேளையிலும் தங்கள் கதவு தட்டப்படலாம் என அச்சம்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.