யாழில் போதனா வைத்தியசாலையில் சம்பவம்; இப்படியும் மருத்துவர்கள் இருகின்றார்கள் !
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மரணங்கள் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தொடர்பில் மருத்துவர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான பதிவு பெரும் பாராட்டை பெற்று வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தன்னலமற்ற மருத்துவ குழு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி - மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் 25.09.2025 அன்று அவருக்கு பிறசருடன் (உயர்குருதி அமுக்கம்) கூடிய வலிப்பு திடீரென ஏற்பட்டது.
ஆகையால் அவர் நோயாளர் காவுவண்டி முலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியாலைக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மூலம் வைத்தியர் கஜேந்திரனுக்கு தகவல் வழங்கப்பட்டது.
தனது பணி முடிந்து வீட்டில் இருந்த வைத்தியர் கஜேந்திரன், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விரைந்து வந்து, தாயையும் சேயையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய வைத்திய குழுவுடன் தயார்நிலையில் இருந்தார்.
பிரதாபனின் மனைவியை காப்பாற்ற வந்த சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர், இரவு வேளை என்றும் பாராது யாருமே இல்லாத வயல்வெளியில் தனது காரினை நிறுத்தி விட்டு நோயாளர் காவு வண்டியில் ஏறி சென்றுள்ளார்.
நோயாளர் காவு வண்டியின் சாரதியின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக நோயாளர் காவு வண்டியானது மிகவேகமாக யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு முன்வாசலுக்கு வர, அங்கு தயாராக இருந்த வைத்தியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளர் காவு வண்டியில் வந்த பிரதாபனின் மனைவியை அவசர சிகிச்சை பிரிவுக்கு மிகவும் வேகமாக கொண்டு சென்றனர்.
அந்த நேரத்தில் தனது மனைவியை காப்பாற்றுவது கடினமான விடயம் என்பதுடன் அவரது பிள்ளையையும் 99 வீதம் காப்பாற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலை காணப்பட்டதாக பிரதாபன் கூறுகின்றார்.
தகுந்த நேரத்தில் மிகவும் விரைவாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட மருத்துவ குழுவினரின் போராட்டத்தால் பிரதாபனின் மனைவி காப்பாற்றப்பட்டார். தனது பிள்ளையை 1வீதம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தாக பிரதாபன் கூறுகின்றார்.
மருத்துவ குழுவினரின் கடுமையான போராட்டத்தால் குழந்தையும் காப்பாற்றப்பட்டு, 39 நாட்கள் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் தற்போது நலமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவ்வாறான தன்னலமற்ற மருத்துவ குழுவினரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமை புரிகின்றமை பெருமைக்குரிய விடயம் ஆகும்.
அதேவேளை சில பொறுப்பற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையை சார்ந்த அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளாலேயே அனைவருக்கும் கெட்ட பெயர் கிடைக்கின்றதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னலமற்று சேவையாற்றி தாயையும் சேயையும் காபாற்ரிய மருத்துவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.