இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும் தேசபந்து தென்னகோன்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தேசபந்து தென்னகோன் கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் 20 திகதி முதல் இன்று (03) வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவம்
2023 டிசம்பர் 31 ம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் உட்பட 08 பேரை கைது செய்ய பிப்ரவரி 27ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பிடியாணை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தேச பந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தேசபந்து தென்னகோனைத் தேடி குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அவரது வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடத்திய போதும் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவைப் பெற வந்தபோது, மார்ச் 19 திகதி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.