கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல் ; அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளமைக்கு, டெங்கு வைரஸ் வீரியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே முக்கிய காரணம் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் பொதுவாக 4 வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஏற்படுவது இயற்கையான ஒரு போக்காகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள் தங்களது சூழலைத் தொடர்ச்சியாக சுத்தமாக வைத்திருப்பதுடன், தத்தமது பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண வடிகால்கள் அல்லது கால்வாய்களை விட, வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பெருகுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாகக் கடந்த சில தினங்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியை மையப்படுத்தி விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அதிக அவதானமிக்க வலயங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 3,500 வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த தொடர்ச்சியான வேலைத்திட்டம் காரணமாக, தற்போது குறித்த பகுதிக்குள் டெங்கு பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.