டெல்டா வைரஸ் தொற்று குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை
இலங்கையில் கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று அடுத்துவரும் 3 வாரங்களில் மோசமடையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை போராட்டம் நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் தொற்றாளர்கள் நிறைந்து வழியும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதாக வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது வெறும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை மோசமடையக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ள வைத்தியர்கள், ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வைத்திசாலைகளுக்கு செல்ல அஞ்சுவதால் மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
தற்போது ஒக்சிஜன் தேவைப்படும் சகல நோயாளர்களுக்கும் அதனை வழங்குவதற்கான செயற்பாடுகள் சமாளிக்கப்படுகின்றபோதிலும் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமேயானால் இறப்புகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் போதுமான கட்டில்கள் இல்லாததால் அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் 200 மரணங்கள் சம்பவிக்கக்கூடும் எனவும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 5,000ஐ எட்டக் கூடும் எனவும் வைத்தியர்கள் கணிப்பிடுகின்றனர்.
இது இவ்வாறிருக்க, உடனடியாக மக்கள் நடமாட்டததைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் டெல்டா திரிபு அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்து அழிவை ஏற்படுத்தும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி தெரிவித்துள்ளார்.