இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீழ்ச்சி; வடக்கில் குறைந்த மக்கள் தொகை
இலங்கையில் சனத்தொகை வளர்ச்சி வேகம், குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கையை வெளியிட்டு, இந்த விடயத்தை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டு 0.5 வீதம் மாத்திரமே சனத்தொகை வளர்ச்சி வீதம் பதிவாகியுள்ளது.

அதிகூடிய சனத்தொகை மேல் மாகாணம் குறைந்த மக்கள் தொகை வடமாகாணம்
தரவுகளுக்கு அமைய, நாட்டின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே, 17 இலட்சத்து, 63 ஆயிரத்து 170 ஆகும். மாகாண ரீதியில் அதிகூடிய சனத்தொகை மேல் மாகாணத்திலும், குறைந்த மக்கள் தொகை வடக்கு மாகாணத்திலும் பதிவாகியுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட வடக்கு மாகாணத்தில், குறைந்த மக்கள் வாழும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுரக் கிலோமீற்றரில் மூவாயிரத்து 549 பேர் வசிக்கும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுரக் கிலோமீற்றரில் 50 பேர் மாத்திரமே வசிப்பதாக புள்ளிவிபர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொகை மதிப்பானது இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பாகும் .
மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.