நாட்டில் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
"சந்தையில் நெல் தட்டுப்பாடு உள்ளது. விலை பிரச்சினையும் உள்ளது. உற்பத்தியை வைத்து பார்க்கும் போது போதுமான அளவு நாட்டரிசி இருக்க வேண்டும். ஆனால் சந்தைக்கு வரவில்லை. எனவே, கண்டிப்பாக வெளிநாட்டில் இருந்து அரிசியை கொண்டு வருவோம்.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும். இது தொடர்பில் இரு அமைச்சுக்களின் கூட்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கவுள்ளோம். இதனால் யாருக்கும் பிரச்சினை இருக்காது. நாங்கள் பிரச்சினையை தீர்ப்போம். இடைத்தரகர்களுக்கு ஏமாற்ற அனுமதிக்க மாட்டோம்.
பாரிய ஆலை உரிமையாளர்களால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சந்தையில் தட்டுப்பாடு இருந்தாலும் உற்பத்தி வந்துவிட்டது என்றால், அவர்களிடம்தான் அது இருக்க வேண்டும். எனவே, கண்டிப்பாக நுகர்வோர் மற்றும் விவசாயிகள் பற்றி சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
பண்டிகை காலங்களில் கண்டிப்பாக தட்டுப்பாடு இருக்காது. " என்றார்.