தனியார் கடன் வழங்குனர்களின் கடன் மறுசீரமைப்புத் திட்டம்
இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பது தொடர்பிலான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளனர்.
எதிர்கால பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்காக புதிய பிணை முறி பத்திரங்களை விநியோகிப்பதன் மூலம் கடனை தீர்க்கும் முறை தொடர்பில் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனிலிருந்து செய்திச்சேவையால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, தனியார் கடன் வழங்குநர்கள் இந்த முன்மொழிவை கடந்த (02.10.2023) ஆம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.
கடன், வட்டியின் அளவைக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது பரிசீலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கால பொருளாதார அழுத்தத்தின் போது கடனை செலுத்துவதை இலகுபடுத்தும் எனும் பெயரிலான புதிய பிணை முறைமை குறித்தும் இந்த முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தனியார் கடன் வழங்குநர்கள், திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தால், அதனை பரசீலிப்பது இலங்கை அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் கடமை என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் வெளியிடப்பட்டுள்ளது.