யானைகளின் அட்டகாசத்தால் நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பு ; அச்சத்தில் மக்கள்
அம்பாறையில் இவ்வாரம் மட்டும் இரு நபர்கள் யானையின் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் பாதை ஊடாக பயணித்த நபர் யானை தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த திருமணமாகாத 62 வயது மதிக்கத்தக்க மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்நிலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல்-ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்றுமுன்தினம்(27) மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்ற குடும்பஸ்தரும் உயிரிழந்திருந்துள்ளார்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.