11 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை
காலி பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.
பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் 'CRI 2264/2019' எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.
இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி, கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது.