கொப்பர் அமிலம் குடித்து குழந்தை உயிரிழப்பு
இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டையைச் சேர்ந்த பிரதீபன் ரத்னீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை தெல்தோட்டையில் தங்க வியாபாரம் செய்து வருகிறார்.
நகைகளை சுத்தம் செய்யும் கொப்பர் அமிலம்
அவரது மனைவி மூன்று குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக மாலை ஐந்து மணியளவில் இந்த வணிக வளாகத்திற்கு வந்தார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த தங்க பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்திய கொப்பர் அமிலம் சிறு குழந்தை குடித்த நிலையில் குழந்தை தரையில் விழுந்துள்ளது.
பதறியடித்த பெற்றோர் குழந்தையை தெல்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் , வைத்தியர்கள் குழந்தையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்த போதிலும், சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.பி.ஜெயசூரியவினால் வெளிப்படையான தீர்ப்பு நவம்பர் 2ஆம் திகதியன்று வழங்கப்பட்டு சடலம் அடக்கம் செய்யப்பட்டது.