கபில சந்திரசேன மரணம் ; ஒத்திவைக்கப்பட்ட மரண விசாரணை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் தொடர்பான மரண விசாரணையை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (9) உத்தரவிட்டது.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான சிசிரிவி மற்றும் தொலைபேசிப் பதிவுகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக செவ்வாய்க்கிழமை (9) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததை அடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

21 சாட்சியாளர்கள்
மேற்படி வழக்கு செவ்வாய்க்கிழமை (9) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு வலய குற்றப்பிரிவினரால் 9 ஆவது நாளாகவும் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரான கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, அவரது மனைவி, வீட்டின் பணியாளர்கள், கபில சந்திரசேனவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்ஷகுலரத்ன உள்ளிட்ட 21 சாட்சியாளர்கள் இதுவரை நெறிப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற விசாரணையில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எம். உதேஷ் தமயந்த, குற்றபுலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் சேனாதீர டி சில்வா மற்றும் பொலிஸ் சிசிடிவி பிரிவின் கான்ஸ்டபிள் மதுஷ சமீர சம்பத் ஆகியோர் சாட்சியமளித்தனர்.