பாடசாலையில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு; 100 மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்ந்த கதி!
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் மாணவர்கள் அருந்திய மதிய உணவை பரிசோதனை செய்ததில், அதில் பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
500 மாணவர்கள் உணவை உட்கொண்டிருக்கலாம்
சமையல்காரர் மதிய உணவில் இறந்து கிடந்ததை அவதானித்தபோது பாம்பை அகற்றிய பின் மாணவர்களுக்கு உணவை பரிமாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீகார் மாநில மொகாமா நகரில் வசிக்கும் சுமார் 500 மாணவர்கள் அந்த உணவை உட்கொண்டிருக்கலாம் என இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் உள்ளூர்வாசிகள் வீதிளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவில் பாம்பு இருந்த விடயம் உண்மையாக இருந்தால், மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற பெரும் பிரச்சினையை இது எழுப்பும் என இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.