நல்லூர் கந்தன் பெருந்திருவிழாவை முன்னிட்டு நீர்க் கண்காட்சி; பக்தர்கள் தவறவிட வேண்டாம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் நீர்க் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் 02.09.2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு
தொடர்ந்து 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.
குறித்த நீர்வளம் பேணும் செயற்திட்டம் தொடர்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாநாட்டு மண்டபத்தில் இன்று 01.09.2026 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு,
ஆறு வருடங்களாக இடம்பெற்ற நீர் சார்ந்த ஆய்வு செயற்திட்டத்தில் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு பிரதேசங்களில் செய்யப்பட்ட நீரியல் ஆய்வுகள் தந்த பெறுபேறுகளையும் மக்களோடு இணைந்து செய்வதில் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்திருக்கிறோம். அதன் இறுதிப்பகுதியில் வழுக்கையாற்றை ஒரு பேசு பொருளாக சமூகத்திற்குள் கொண்டுவர எடுத்த முயற்சி ஊரவர்களின் கற்பனையையும் சேர்த்து பிரேதேச சபைகளுடன் இணைந்து எடுத்த முயற்சியுடன் ஆய்வுகள் குறித்து இன்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் கிணறோடு சேர்ந்த வாழ்வியலில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாக நிலத்தடி நீரைப் பேணுவதற்கு கிணறுகளையும் பராமரித்தல் அவசியமானது என்பதும் அதற்கு அனுகூலமான வகையில் இருக்கின்ற ஊர்க் குளங்களை தூர்வார்ந்து பயனுள்ள வகையில் அவற்றில் நீர் தேக்குவது அவசியமானது.
கிராமிய குளமொன்றை கிராம மக்களின் ஈடுபாட்டோடு பல்வேறு சமூகத் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் தொழிநுட்ப அறிவையும் கருவிகளையும் பயன்படுத்தி பக்குவமாக தூர்வாருதல் தொடர்பிலும் அதில் கிடைக்கும் பாடங்களையும், மற்றும் பல்வேறு விடயங்களையும் முப்பரிமாண தோற்றங்களாக, செய்தியாக, படங்களாக இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளோம்.
கடந்த ஆண்டுகளை விட பல முனைகளில் நிலத்தடி நீர் சார்ந்த தெளிவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பல்வேறு காட்சிகளையும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் வரும் இழப்புகள் பற்றியும் மக்கள் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஈடுபாட்டோடு முடிவெடுத்தலையும் செய்து வந்திருக்கிறோம் என்றார்.
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் நீர்க் கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன.
நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறித்த நீர் கண்காட்சியில் பங்கேற்று வடமாகாண நீர்வளம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அதற்கு மக்கள் கூட்டாக என்ன செய்யலாம்? போன்ற விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாத்து கரம் கோர்த்துப் பயணிக்க வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.