மீண்டும் இலங்கைக்கு ஆபத்தா? கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ; யாழ்.பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு 06.01.2026 முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் தோன்றிய காற்றுச் சுழற்சி தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.
இக்காற்றுச்சுழற்சிக்கு தேவையான மறை வெப்பச் சக்தியின் பற்றாக்குறையால் இது எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் மிக மிக மெதுவாக நகர்ந்து நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக விருத்தி பெற்றுள்ளது.

இது மேலும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இலங்கைக் தெற்காக நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுச் சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 06.01.2026 முதல் 11.01.2026 வரை மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிக முக்கியமாக நாளை 06.01.2026 முதல் 11.01.2016 வரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மிக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை இக்காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும்.

எனவே மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம். வடக்கு, கிழக்கு,மத்திய, வட மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் முகாமையாளர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையோடு தொடர்புடைய கனமழை நிகழ்வு தொடர்பாக அதிக கரிசனை கொள்வது விரும்பத்தக்கது.
அதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் நாளை 06.01.2026 முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
அதே வேளை கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகளில் பலநாட் கலங்களில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்களும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.