யாழில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள்; மூவர் கைது
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை கடற்கரை பகுதியில் நிலத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற மன்னாரில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் நிலத்தின் கீழ் புதைத்து வைத்திருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேலணையை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா போதைப்பொருளை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வந்து , அவற்றை கடற்கரையை அண்டிய பகுதியில் நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.