பேரிடரின் பின்னர் காத்திருக்கும் ஆபத்து ; பெரும் அவதானம் மக்களே
பேரிடரின் பின்னர் இந்த நாடு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது. இந்நாட்களில் கடும் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், சுவாச நோய்கள், சரும நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக் கூடிய டெங்கு சிக்கன்குனியா போன்ற தொற்றுநோய்கள் வெகுவாக பரவவாய்ப்புள்ளன.
ஆகையால் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தொற்றுநோய்த் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார நெறிமுறை
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறத் தேவையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் தமது வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்நாட்களில் கடும் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், சுவாச நோய்கள், சரும நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக் கூடிய டெங்கு சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்கள் வெகுவாக பரவவாய்ப்புள்ளன.
சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீரை உணவுக்கு எடுத்துக் கொள்வதால், அஜீரணம், கடும் வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் எப்படைடிஸ் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நீர் நிலைகள் மாசடைந்துள்ளன, இயலுமானவரை கொதித்தாறிய நீரை பயன்படுத்துங்கள். அதிகளவான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூய குடிநீர் வழங்கப்பட வேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களை தேடி நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் தன்னார்வ தொண்டர்கள் உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கலாம்.
எனினும் ஆதரவற்ற மக்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆகையால் சுகாதாரமான உணவுகளை வழங்குங்கள். வயிற்றுப்போக்கு, டைபைட்டு உள்ள நோயாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகி இருங்கள்.
பாதுகாப்பு நிலையங்களில் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ள எவரேனும் இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியை தொடர்புக் கொண்டு தெரிவிப்பது அவசியம். வெள்ளத்தின் பின்னர் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் கண்டிப்பாக எலிகாய்ச்சலுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்வது அவசியம்.
ஈரலிப்பான நிலங்கள், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுத்தப்படுத் பணிகளை மேற்கொள்வதால் எலிக்காய்ச்சல் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. அத்தோடு இருமல், தடிமன், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்.
இன்புளுவென்சா போன்ற சுவாச நோய்கள் மழைக்காலங்களில் வேகமாக பரவுகிறது. குறிப்பாக 2 வயதுக்கு குறைந்த குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் ஆகியோரின் ஆரோக்கியம் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுங்கள்.
ஒரு சில இடங்களில் தற்போது தொற்றுநோய்களுக்கு ஆளாகிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றார். சருமநோய்த் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜனக்க அக்கரவிட்ட தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்த மக்களுக்கு சரும நோய்கள் ஏற்பட்டுள்ளன.
வெள்ள நீரில் அதிக நோய்க்கிருமிகள் உள்ளன. ஆகையால் வெள்ள நீரில் அதிக நேரம் இருந்தோர், ஏற்கனவே சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உரிய சிகிச்சை பெறாதுவிடின் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.