வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயல் ; தமிழகத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நாளை (23) புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு குறைவாகக் காணப்பட்டாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேற்கு தென்மேற்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைந்தால், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடுவதற்காக இந்தியா பரிந்துரைத்த பெயர்களில் ‘முரசு’ என்பதும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைவது மற்றும் அதன் நகர்வுப் பாதை தொடர்பான இறுதி நிலவரம் அதிகாரபூர்வ வானிலை அறிவிப்புகளைப் பொறுத்தே உறுதிப்படுத்தப்படும்.
தமிழகத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை பல இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வானிலைத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.