அர்னாப் புயலில் சிக்கிய இலங்கைப் படகுகளுக்கு இந்தியா அடைக்கலம்!
சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவை அண்மித்த கடற்பரப்பில் சிக்கியுள்ள 25 இலங்கை மீன்பிடிப் படகுகள், பாதுகாப்புக் கருதி இந்திய கடல் எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி
வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் ‘அர்னாப்’ (Arnab) சூறாவளிச் சூழலைக் கருத்திற்கொண்டு, மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி, நீர்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட கடற்பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு குறித்த படகுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீன்பிடிச் சமூகத்தினர் அனைவரும் அவதானத்துடன் செயற்படுவதுடன், அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.