சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் சுங்க திணைக்களத்தினர்
சுங்க திணைக்களத்தினர் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு வழங்காமை, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிவர்த்திக்கப்படாத பாரிய பிரச்சினைகளை முன்வைத்து சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சுங்க திணைக்களத்தினர் ஊடக அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளனர்.
விசேடமாக சுங்கச் சேவைக்கான திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய, தற்போது 4 வருடங்களாக சுங்க சேவையின் பதவியுயர்வு, பதவியுயர்வுகளுக்கான சம்பள நிர்ணயம் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனைத் தவிர, சுங்கத் திணைக்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சேவைக்கு மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், திணைக்களத்தினுள் வெற்றிடமாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.