இலங்கையில் கிரிப்டோ கரன்சி பாரிய நிதி மோசடி! வெளியான பரபரப்பான தகவல்
இலங்கையில் கிரிப்டோ கரன்சி என்ற விதத்தில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, இந்த பாரிய நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
”ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு கிடைத்தது.
இந்த வியாபாரம் தொடர்பான விசாரணையில், கீர்த்தி பண்டார என்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஷாங்காய் என்ற சீன ஆணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய காதலி வான் என்ற பெண் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மூவரும் சேர்ந்து இந்தத் தொழிலை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு சீன பிரஜைகளும் செப்டம்பர் 12 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.