நாட்டை முடக்குவதா...இல்லையா என்பது குறித்து விரைவில் தீர்மானம்
நாட்டில் கொவிட் -19 தொற்று பரவல் நிலைமை தீவிரமடையும் போது எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பான மாற்று தெரிவுகள் பல உள்ளன.
நாட்டை முடக்குதல் அந்த தெரிவுகளில் ஒன்றாகும். அதற்கமைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் , ஏனைய வைத்தியதுறை நிபுணர்கள் ஆகியோர் கொவிட் -19 பரவல் தீவிர நிலைமையைக் கவனத்தில் கொண்டு ஸ்திரமான தீர்மானமொன்றை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தி வருகிறது.
நாட்டை முடக்குதல் என்பது கொவிட் -19 பரவல் தீவிரமடையும்போது எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பான தெரிவுகளில் ஒன்றாகும். எனவே நிலைமை தொடர்பில் நன்கு ஆராய்ந்து உரிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான தீர்மானம் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினரால் எடுக்கப்படும். நாட்டில் யாருக்கும் பலவந்தமாக தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை.
அது பிரஜைகளுடைய உரிமை சார்ந்ததாகும். ஆனால் தடுப்பூசிகள் தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாட்டை உடையவர்கள் தாம் எதற்காக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.