துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு
கொழும்பில் ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு கல்கிசை நீதவான் காஞ்சனா என். சில்வா இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குறித்த வழக்கில் அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பாணை அனுப்பவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், குறித்த வழக்கில் நேரடி மற்றும் சூழ்நிலைச் சாட்சியங்கள் போதியளவில் இல்லை என தெரிவித்து, கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி முன்னாள் கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா, துமிந்த திஸாநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே 23 ஆம் திகதி துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவரை விடுவித்திருந்தது.
இந்நிலையில், புதிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீண்டும் இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.