சஷி வீரவன்ச தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!
போலி இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான வழக்கு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு
கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மேன்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில், அவற்றை சமர்ப்பிப்பதற்கு நீதிவான் கால அவகாசம் வழங்கினார். இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.