பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய்!
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிக்மா திரைப்பட இயக்குநரும் முதலமைச்சர் விஜயின் மகனுமான ஜேசன் சஞ்சய் பங்கேற்றுள்ளார். சிக்மா திரைப்படம் அக். 2 ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளதால், படத்திற்கான புரமோஷன்களுக்காக புதிய பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.

நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ்
அந்த வகையில், நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிக்மா படத்திற்காக இயக்குநர் ஜேசன் சஞ்சய், படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொகுப்பாளரான நடிகர் நாகர்ஜுனா, ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வரவேற்றார். மேடையில் இருந்தவாறே பிக் பாஸ் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஜேசன் சஞ்சய் கலந்துரையாடினார். பிக் பாஸ் போட்டியாளராக உள்ள நடிகர் திரிகுன்னின் படங்களைப் பார்த்துள்ளதாகவும், அவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த திரிகுன், சஞ்சய்க்கு நன்றி கூறி படம் வெற்றி பெற வாழ்த்து கூறினார். தெலுங்கிலும் சிக்மா படம் நேரடியாகப் படம் வெளியாகவுள்ளதால், படத்திற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.