யாழில் தியாகி திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்; தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை
யாழில் தியாகி திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தமிழ் மக்களியே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை ஒன்றினை இன்று (28)வெளியிட்டுள்ளது.

தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கையில்,
பேரினவாதத்தின் நெகிழ்ச்சியற்ற போக்கை வெளிக்காட்டி நிற்கும் தியாகி திலீபனின் உருவச்சிலை அகற்றல் நல்லூரில் அமைக்கப்பட்டு பேரினவாதத்தால் உடைக்கப்பட்ட தியாகி திலீபனின் நினைவுத் தூபி இருந்த நினைவிடத்தில், தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு நாட்களையொட்டி நிறுவப்பட்ட தியாகி திலீபனின் திருவுருவச்சிலை சடுதியாக சிறீலங்காப் பொலிசாரினால் அராஜகமாக அகற்றப்பட்டுள்ளது.
திருவுருவச் சிலை வைக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கெதிராகவும் சிலையை அகற்றுமாறும் அரசும் அதன் அதிகார அமைப்புகளும் ஏற்பாட்டாளர்கள் மீது பலத்த அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் சிலை வைப்பையொட்டி சாதாரணர்களான பேரினவாதிகளாலும் வெட்கமேதுமின்றி கடுமையான இனவாத வன்மமும் கக்கப்பட்டு வந்தன.
கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் பல்வேறு இடங்களிலும் திலீபனின் நினைவு நிகழ்வுகளைக் குழப்பும், மற்றும் அவற்றின் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் அரசின் அதிகார அமைப்புகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த அதே வேளை மக்களிடையே உள்ள பேரினவாதிகளாலும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான வன்மமும் இம்முறை அதிகளவில் வெளிப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நாகரிகமும் பகுத்தறிவுமுள்ள எவருக்கும் கவலை தரும் வகையில் இதில் இளையவர்கள் பலரும் காணப்பட்டனர்.
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையின் மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவரும் இத்தகைய அடக்குமுறைகளையும் வன்மங்களையும் தமிழ் சிவில் சமூக அமையம் எப்போதும் வன்மையாகக் கண்டித்து வருவதுடன் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளின் ஒரு அங்கமான நினைவு கூரும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.
தமிழர்களின் தாயகத்தில் தமிழ் இனத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டவர்களைக் கொண்டாடும் வகையிலும், தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட முழு அளவிலான போரில் தாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கிஞ்சித்தும் கருத்தில்கொள்ளாது அமைக்கப்பட்டுள்ள பல நூறு நினைவுத் தூபிகளுக்கு உரிமையாளராக இருக்கும் அரசுக்கும் பேரினவாத சக்திகளுக்கும், தமிழ் மக்கள் தமக்காக உயிரைத் தியாகம் செய்த தியாகிகளுள் ஒருவரான தியாகி திலீபனுக்கு ஒரு உருவச்சிலையை அமைப்பதையோ, அவருக்கான நினைவு நிகழ்வுகளை நடத்துவதையோ கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மேலும் தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள பல்வேறு சட்ட விரோத சிலைகளையும் வழிபாட்டிடங்களையும் அகற்றாத அரசுக்கும் அதன் அங்கமான பொலிசாருக்கும் தமிழ் மக்கள் வைத்த ஒரு சிலையைக் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. சிறீ லங்கா அரசிடமிருந்தும் பேரினவாத சக்திகளிடமிருந்தும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நினைவு கூரும் உரிமைகள் தொடர்பாக நாகரிகமான ஒரு எதிர்வினையை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
ஆயினும் தாம் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் என பொய்யான கணித வாய்ப்பாடுகள் மூலம் உரிமை கோரும் ஜே.வீ.பியின் முன்னணியான என்.பீ.பியின் அரசாங்கத்தால் இந்த ஒரு விடயத்திற்கூட தாராண்மைவாதிகளாகவோ அல்லது நாகரிகமுள்ளவர்களாகவோ நடந்து கொள்ள முடியவில்லை என்பது பேரினவாத்தின் வலிமையையும் அது எந்த அளவுக்கு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது என்பதையும் அதற்கு எந்த ஒரு அரசாங்கமும் விதிவிலக்கானதல்ல என்பதற்குமான ஒரு எடுத்துக்காட்டாக தமிழ் மக்களுக்கு இந்த சம்பவம் அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஜே.வி.பி.யின் தலைவருக்கு சிலை அமைப்பதற்கும், ஜே.வி.பி. போராளிகளுக்கான நினைவு தினத்தை வருடாவருடம் அனுசரிப்பதற்கும் அனுமதி வழங்கும் சிறீலங்கா அரசால், தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை.
சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்த தமது தோழர்களை நினைவுகூரும் உரிமையை காலங்காலமாகப் பெற்றுள்ள இன்றைய ஆளும் கட்சியான ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம்கூட, பேரினவாத சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ, தமிழ் மக்கள் தரப்பின் நியாயத்தை எடுத்துக்கூறவோ தயாராக இல்லை.
இத்தகைய பேரினவாத மனநிலையிலிருந்து வெளியே வந்து தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குரல் கொடுக்கவும்கூட இன்றைய அரசு தயாராக இல்லை என்பதுதான் இலங்கைத் தீவின் யதார்த்தமாக இன்றும் இருக்கின்றது. அண்மைக்காலமாக இடம்பெறும் இத்தகைய பல்வேறு பேரினவாத செயற்பாடுகள், சிறீலங்காவில் ஆட்சிகள் மாறினாலும் பேரினவாதிகள் மத்தியிலும் அரச கட்டமைப்பினுள்ளும் ஆழமாக வேரூன்றியுள்ள நாசகரமான பேரினவாத மையச் சிந்தனை மாறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன.
இன்றைய அரசாங்கத்தால் ஊதிப்பெருக்கிக் காட்டப்படும் 'மாற்றங்கள்' ஆகக்கூடியது வாய்மொழியில் மட்டுமே உள்ளன என்பதற்கான ஆதாரங்களே இவை. ஆளும் கட்சிகளோ அல்லது ஆட்சியிலுள்ள நபர்களோ மாறினாலும், சிறீலங்கா அரசு என்ற நிறுவனமும் அதனைக் கட்டுப்படுத்தும் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வையோ, தொடர்ந்து கட்டவிழ்த்துவரும் பேரினவாத அடக்குமுறைச் செயற்பாடுகளையோ ஒருபோதும் மாற்றப்போவதில்லை என்பதன் வெளிப்பாடுகளே இவை.
புதிதாகப் பதவிக்கு வரும் ஆட்சியாளர்களும் அதே பேரினவாதச் சிந்தனையுடன்தான் செயற்படுவார்கள் என்பதையும் இந்நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் எமக்கு உறுதிப்படுத்துகின்றன. இந்த நாட்டில் தமிழ் மக்கள் சம பங்காளர்கள் என்பதை பேரினவாதிகளும் அரசும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையும், பேரினவாதச் சிந்தனை தானாகவே அகன்றுபோகப்போவதில்லை என்பதையும் அண்மைக்கால நிகழ்வுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக நினைவூட்டுகின்றன.
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைகளைக்கூட மறுக்கும் சிறீலங்கா அரசின் பேரினவாத உள்ளடக்கம் எப்போதும் தெளிவாகவே இருந்து வந்துள்ளது. தான் ஆட்சிக்கு வந்ததன் மூலம் இத்தீவில் இனவாதத்தை ஒழித்துவிட்டதாகப் பறைசாற்றும் இன்றைய ஆளும் கட்சி ஆடசிக்கு வந்ததிலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக முன்வைக்கும் ஒரு கோரிக்கைக்கு கூட சாதகமாக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
காலங்காலமாக பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தொரடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நோக்கிலான இனவாத நடவடிக்கைகளில் ஒன்றைத்தானும் நிறுத்தி வைக்கக்கூட நடவடிக்கை எடுத்ததுமில்லை.
முன்னைய அரசாங்கங்களைப் போலவே அத்தகைய என்.பீ.பி அரசாங்கமும் பேரினவாதச் சிந்தனைகளால் கட்டுண்டு இருப்பதை, தியாகி திலீபனின் நினைவு நாட்களில் வழமைபோல இடம்பெற்ற அடக்குமுறைகளும், திலீபனின் உருவச்சிலையை அகற்றுவதற்காகப் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களும் இறுதியாக சிலை அகற்றப்பட்டமையும் வெட்ட வெளிச்சமாக தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளன. தமிழர்களுள் ஒரு சிலர் மத்தியில் 'மாற்றம்' ஏற்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்ட மாயைகளையும் களைந்துள்ளது.
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை மறுத்தும் தமிழர் வரலாற்று நினைவுகளை அழிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளித்தும்இ சிங்கள பேரினவாதத்தின் இலக்குகளை இன்றும் தொடரும் கருவியாகச் செயற்படும்.
சிறிலங்கா அரசையும் அதன் அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தையும் அதன் பேரினவாதச் செயற்பாடுகமையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றுள்ளது.