மீகொடை தானசாலை விபத்து ; மற்றுமொரு சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மீகொடை சந்தி தானசாலையில் கெப் ரக வாகனம் மோதி ஆறு பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (07) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, ஹோமாகம பதில் நீதவான் தரிந்து கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் பன்னிப்பிட்டிய, பெலன்வத்தை பகுதியைச் சேர்ந்த டொன் சரத் ஹெட்டிகே ஆவார்.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் நேற்று (06) சனிக்கிழமை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட கெப் ரக வாகனத்தின் சாரதி, வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களும் தற்சமயம் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.