யோஷித ராஜபக்ஷவின் பாட்டிற்கு மனநல அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு
யோஷித ராஜபக்ஷவின் பாட்டியும் பணமோசடி வழக்கில் இணை சந்தேக நபருமான டெய்சி ஃபாரெஸ்ட் விசாரணைக்கு வருவதற்கு மனரீதியாகத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க, சிறப்பு மனநல அறிக்கையைப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி உதேஷ் ரணதுங்க இன்று கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னைய விசாரணை ஒன்றின் போது, ஃபாரெஸ்ட்டுக்காக முன்னிலையான சட்டத்தரணி அனில் சில்வா, தனது கட்சிக்காரர் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தொடர்வது நியாயமற்றது என்றும் வாதிட்டார். அந்த சமர்ப்பிப்பு தொடர்பாக அரசுத் தரப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கவே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அரச தரப்பு சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதிபதி, ஃபாரெஸ்டின் தற்போதைய மன திறன் குறித்த சிறப்பு மனநல அறிக்கையைப் பெற கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.