கஸ்ஸப தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சன்சுதீன் உத்தரவிட்டார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணை தொடர்பாகவே அங்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிமன்றத்தையும் நீதவானையும் அவமதிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டதாக அங்கிருந்த சில சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலும், அவருக்காக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை. இதுகுறித்து நீதவான் அவரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த கஸ்ஸப தேரர், திறந்த நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்க அனுமதி கோரினார்.
அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நடைபெற்ற நாளில் தான் அனுராதபுரத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
அத்துடன், தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், தனக்குப் பிணை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், முந்தைய இரவுதான் தன்னைத் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத்து வந்ததாகவும், இதனால் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் நீதிமன்றத்தையோ நீதவானையோ அவமதிக்கவில்லை என்றும், பௌத்த துறவற ஒழுக்க நெறிகள் தொடர்பான தனது கருத்தையே வெளிப்படுத்தியதாகவும் அவர் விளக்கமளித்தார்.
வழக்கின் பின்னணி
எனினும், காவல்துறை தரப்பில் ஆஜரான திருகோணமலை துறைமுக காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பரிசோதகர் சசங்க குமார சமரசிங்க, சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஏற்கனவே திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை அவர் மீறியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், பலாங்கொட கஸ்ஸப தேரரை இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
திருகோணமலை கோட்டைப் பகுதியில் கடற்கரையோரமாக உரிய அனுமதியின்றிக் கட்டுமானம் மேற்கொண்டமை மற்றும் புத்தர் சிலை ஒன்றை நிறுவியமை தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில், திருகோணமலை துறைமுக காவல்துறையினர் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 11ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவரைக் கைது செய்யுமாறு நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.