மருத்துவர்களின் கிறுக்கல் கையெழுத்துக்கு தடை ; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்
பெரும்பாலானோர் விசைப்பலகைகளைப் பயன்படுத்தும் இந்தக் காலத்தில், மருத்துவர்களின் கையெழுத்து தெளிவாக இருப்பது மிக அவசியம் என இந்திய நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், "தெளிவாகப் படிக்கக்கூடிய மருத்துவப் பரிந்துரை (prescription) ஒரு அடிப்படை உரிமை" என்றும், இது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறியுள்ளது.
புரியாத மருத்துவ அறிக்கை
அண்மையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் வந்த புரியாத மருத்துவ அறிக்கையைப் பார்த்த நீதிபதி அது புரிந்துகொள்ள முடியால் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து மருத்துவர்களும் ஆங்கில பெரிய எழுத்துக்களில் (Capital Letters) மருந்துச் சீட்டுகளை எழுத வேண்டும் என உத்தரவிட்டார்.
அத்துடன், மருத்துவப் பாடத்திட்டத்தில் கையெழுத்துக் கல்வியைச் சேர்க்கவும், இரண்டு ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மருந்துச் சீட்டுகளை நடைமுறைப்படுத்தவும் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மோசமான கையெழுத்து மருத்துவப் பிழைகளுக்கு வழிவகுத்து, கடுமையான அல்லது துயரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 1999ஆம் ஆண்டில் கவனக்குறைவான கையெழுத்தால் 7,000 பேர் இறந்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில், சர்க்கரை நோய்க்கான மருந்துக்குப் பதிலாக ஒத்த பெயருடைய வலி நிவாரணி வழங்கப்பட்டதால் ஒரு பெண் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வழக்கும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) மருத்துவர்களின் பணிச்சுமை காரணமாகவே கையெழுத்து மோசமாகிறது என்று கூறியுள்ளது. குறித்த விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.