தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ; தம்பதி கைது
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் தெஹிவளை, படோவிட்ட பிரதேசத்தில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (26) அவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தெஹிவளை ஓபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 30 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். வேலை முடிந்து வீடு திரும்பிய நபர், தனது வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் அருகே நின்று கொண்டிருந்தபோது, இந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 28 வயதுடைய துப்பாக்கிதாரியும் அவரது 31 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களிடம் கைக்குண்டு ஒன்றும் தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.