மன்னார் மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரதேச செயலாளரின் கொரோனா விவகாரம்
மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவருக்கு ஆண்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்த நிலையில் குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் குறித்த பிரதேச செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையெனவும், அவரது கடமையில் ஏற்பட்ட தவறை மறைப்பதற்காகவே போலியாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரச நிருவாகத்தில் உயர் பதவியில் உள்ள உறவினரான சுகாதார பரிசோதகர் ஒருவரின் உதவியுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மன்னர் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேச செயலகத்தின் சேவைகளும் நேற்று புதன்கிழமை மாலை இடை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே குறித்த சம்பவம் தொடர்பில் பி.சி.ஆர் பரிசோனை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ரி.விநோதன் அவர்களிடம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் உட்பட்ட மேலதிகாரிகள் உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்த்க்கப்பட்ட குறித்த பிரதேச செயலாளர், தற்போது முல்லைத்தீவிற்கு சென்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பொறுப்புவாய்ந்த அரச உயர் அதிகாரிகள் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.