யாழில் நாய் இறந்த துயரத்தில் சாப்பிடாமல் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழ்.வட்டுக்கோட்டையில் செல்லமாக வளர்ந்து வந்த நாய் திடீரென உயிரிழந்த துயரத்தில் 5 நாட்கள் உணவு சாப்பிடாமல் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் போதே கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (61) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவது,
அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளது.
அந்த சோகத்தில் வயோதிபப் பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் வெளிநோயாளர் பிரிவில் அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.
அவரது சடலம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.