கொரோனா அச்சுறுத்தல்: வர்த்தக சங்கங்கள் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போதுள்ள நிலைமையில் நாட்டை குறுகிய காலத்திற்கேனும் முடக்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற போதிலும் அதற்கான சாதகமான பதில் உரிய தரப்பினரால் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தொற்றின் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு வர்த்தக சங்கங்கள் பல தாமாக முன்வந்து குறுகிய காலத்திற்கு கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளன.
அதற்கமைய நேற்று முதல் நகர்புறங்களிலுள்ள, நகர் புறங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.

இதுவரையில் கேகாலை, கம்புருபிட்டி, கெகிராவ, பலாங்கொடை, எம்பிலிபிட்டி, கம்பஹா, அம்பலாங்கொட, பண்டாரவளை, அம்பலாந்தோட்டை, பெலியத்த, வேயங்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, மாத்தளை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதே போன்று ஹட்டன் உள்ளிட்ட மேலும் சில நகரங்களிலும் குறுகிய காலத்திற்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நகரசபையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
