வடக்கில் இதுவரை கொரோனா தொற்றால் 327 பேர் மரணம்!
வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை ஒகஸ்ட் -26 வரை கொரோனா வைரஸ் தொற்றினால் 327 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த போதும் வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் முதலாவது தொற்றாளர் கண்டறியப்பட்டார்.
அன்றிலிருந்து நேற்றுவரையான 17 மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழில் 224 பேரும் வவுனியா மாவட்டத்தில் 55 பேரும் கிளிநொச்சியில் 18 பேரும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலா 15 பேரும் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.