யாழில் 7 பேர் உட்பட வடக்கில் மேலும் 10 பேரை பலியெடுத்த கொரோனா
யாழில் 7 பேர் உட்பட வட மாகாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்று 10 பேர் உயிரிழந்தனர். அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஞா. பிரகாஷ் (வயது - 26) போதனா மருத்துவமனையில் 10ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த 23 வயது இளைஞர், நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயது நபர், பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயது ஆண், கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.
அத்துடன் வடமராட்சி - அல்வாயைச் சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் தெல்லிப்பழையைச் சேர்ந்த 76 வயது பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 47 வயது ஆணும், 86 வயது பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 59 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்றும் தெரிய வருகின்றது.