மன்னாரில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, மன்னார் மூர்வீதி பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த வயோதிபர் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இறுதியாக உயிரிழந்த 3 வயோதிபர்களும் எவ்வித கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், மன்னாரில் இந்த மாதம் தற்போது வரையில் 246 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் 1270 தொற்றாளர்களும், மாவட்டத்தில் இது வரை 1287 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதுவரை மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது