வைத்தியசாலையில் தேங்கியுள்ள கொரோனா சடலங்கள்!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 பேரின் சடலங்கள், தகனம் செய்யப்படாமல் வைத்தியசாலையின் பிணவறையிலேயே தேங்கிக்கிடப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களில் இயங்கும் 13 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு அங்கு பரிசோதணை மூலம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இவ் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த (28) ஆம் திகதி திகதி முதல் (30) வரை 11 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள், அடையாளம் கண்டு உறுதிப்படுத்தாததால் அவற்றை தகனம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் பிரதேச பொது சுகாதார பிரிவினருக்கு தெரிவித்து, அவர்கள் ஊடாக, வீட்டாருக்கு தகவல் வழங்கப்படுகின்றபோதிலும் சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர்.
இதனால்தான் குறித்த சடலங்கள் தேங்கிக்கிடக்கின்றன. அதேவேளை, இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடிய பின்னர், சடலங்களை தகனம் செய்வதற்கும்,வீட்டார்களை வரவழைத்து சடலத்தை அடையாளம் காண்பிக்கவும் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சடலமொன்றை முழுமையாக தகனம் செய்வதற்கு சுமார் இரண்டரை மணிநேரம் தேவைப்படுவதனால் இரவு நேரங்களிலும் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சில வைத்தியசாலைகளிலும் இதே நிலைமை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.