கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு புதிய நெருக்கடி!
கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், எரிவாயு தட்டுப்பாட்டினால் சிலிண்டர்களைச் சார்ந்திருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் எரிவாயு நெருக்கடியின் தாக்கம், கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

எரிவாயு பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு குறுஞ்செய்தி
காலி முகத்திடல் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு முக்கிய சொகுசு குடியிருப்பு வளாகத்தில்,, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முன்னணி வணிகர்கள் உட்பட பலர் வசிக்கின்றனர்.
எரிவாயு பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு நிர்வாகத் தரப்பிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய சொகுசு குடியிருப்புகளுக்கு வழக்கமாக மையப்படுத்தப்பட்ட குழாய் வழி அமைப்பின் (centralized pipeline system) மூலமே எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், தற்போது நிலவும் தேசிய நெருக்கடியால், இந்த விநியோகத்தைத் தொடர்ந்து பராமரிப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
காலி முகத்திடல் அருகிலுள்ள அந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள், தற்போது தங்களின் கையிருப்பில் உள்ள கடைசி எரிவாயுவை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
எஞ்சியிருக்கும் எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்தவும், மற்ற நேரங்களில் மின்சார உபகரணங்களை அதிகம் பயன்படுத்தவும் குடியிருப்பாளர்களுக்கு அந்த குறுஞ்செய்தியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலை கொழும்பின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. நாரஹேன்பிட்டியில் (Narahenpita) உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இந்த மாதத்திற்குத் தேவையான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளது. டிசம்பர் மாதத்திற்குத் தேவையான எரிவாயு கையிருப்பு இல்லாததால், அங்குள்ள நிர்வாகத்தினர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், குழாய் வழி அமைப்புகள் இன்றி, 'வீட்டுக்கே விநியோகம்' (home delivery) முறையில் எரிவாயு சிலிண்டர்களைப் பெறும் சில குடியிருப்பு வளாகங்களில், அந்த விநியோகச் சேவைகள் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் நவம்பர் மாதத்தில் மூன்று எரிவாயு ஏற்றி வரும் கப்பல்களை நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக 'லாஃப்ஸ் கேஸ்' (Laugfs Gas) நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இரண்டு கப்பல்கள் நவம்பர் 12-14 மற்றும் நவம்பர் 24-28 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், மற்றொரு கப்பல் நவம்பர் 15-17 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பு துறைமுகத்திற்கும் வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விநியோகச் செயல்முறையின் ஒரு பகுதியாக, ஹம்பாந்தோட்டை முனையத்திலிருந்து உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயுவை விநியோகம் செய்யத் தேவையான அனுமதியைப் பெறுவதற்காக, தாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக Laugfs Gas நிறுவனம் தெரிவித்துள்ளது.