முல்லைத்தீவில் கள்ளச்சாராய கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள்; பொலிஸாரிடம் பாய்ச்சல்
முல்லைத்தீவில் கள்ளச்சாராய கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று ( 27) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,

அயல் கிராமங்களுக்கம் விநி யோகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பைவிடவும் தற்போது கள்ளச்சாராய உற்பத்தி குறைவடைந்துள்ளது. இருப்பினும் வலைஞர்மடம் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
இவ்வாறு வலைஞர்மடம் கிராமத்தில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தியினூடாக அம்பலவன்பொக்கணை, மாத்தளன், செம்மண்குன்று உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கள்ளச்சாராய விநியோகம் செய்யப்படுவதாகவும் மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக 'சுக்கிரி' என அழைக்கப்படும் ஒருவராலேயே இவ்வாறு பாரிய அளவில் கள்ளச்சாராய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு அயல் கிராமங்களுக்கம் விநி யோகம் செய்யப்படுவதாகவும் அறியக் கிடைக்கின்றது.
பொலிஸாருக்கும் குறித்த கள்ளச்சாராய உற்பத்தியாளருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும், பொலிஸார் குறித்த கள்ளச்சாராய உற்பத்தியாளரிடமிருந்து கையூட்டுக்களைப் பெறுவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே கள்ளச்சாராய உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். அதற்கு முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிலளிக்கையில்,
இவ்வாறு சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களைக் கைது செய்து மிகக் கடுமையான சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் எம்மால் கவனம் செலுத்தப்படும். குறித்த சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபடும் நபரைக் கைதுசெய்து அவருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.