யாழில் புதிய சர்ச்சை ; நீதிபதி இடமாற்றம் குறித்து கடும் விமர்சனம்
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக அண்மையில் பதவியேற்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் கடுமையான தீர்ப்புகளை வழங்கிய நிலையில், குறுகிய காலத்திலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்ற முதல் வாரங்களிலேயே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களுக்கு அதிகளவிலான அபராதங்களும் கடூழிய சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீதிபதியின் திடீர் இடமாற்றம் தொடர்பாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அரசியல் தலையீடு தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
அதேவேளை, இந்த இடமாற்றத்திற்கு வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சில தரப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாக மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.