இனி ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கி, அதன் பாதுகாப்பைச் சோதிப்பதற்காக அமெரிக்காவின் வெய்ல் கார்னெல் மருத்துவக் கல்லூரிக்கு (Weill Cornell Medicine) 8.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய சிறுவர் சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (NICHD) நான்கு ஆண்டுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளது. மருத்துவர் ஜோக்கன் பக் மற்றும் மருத்துவர் லோனி லெவின் தலைமையிலான ஆய்வுக் குழு, உடலுறவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் உட்கொள்ளக்கூடிய இந்த மாத்திரையை உருவாக்கி வருகிறது.

கருத்தரிப்பைத் தடுக்கும் மாத்திரை
இந்த மாத்திரை விந்தணுக்களின் இயக்கத்தைத் தற்காலிகமாகத் தடுத்து, சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை கருத்தரிப்பைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் தாக்கம் நீங்கிய பின்னர், ஆண்களின்இனப்பெருக்கத் திறன் இயல்பு நிலைக்குத் திரும்பும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகளின்படி, குறிப்பிட்ட நொதியின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் விந்தணுக்களின் இயக்கத்தை நிறுத்தி, ஆய்வகச் சோதனைகளில் கருத்தரிப்பைத் தடுக்க முடிந்துள்ளது.
தற்போது, மனிதர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் பாதுகாப்பு மற்றும் நச்சுத்தன்மை தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆரோக்கியமான ஆண்களை உள்ளடக்கிய முதற்கட்ட மனித மருத்துவப் பரிசோதனையை நடத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், ஆண்களுக்கான கருத்தடை முறைகள் பெரும்பாலும் ஆணுறைகள் மற்றும் நிரந்தரக் கருத்தடை அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய புதிய மாத்திரை வெற்றியடைந்தால், கருத்தடைப் பொறுப்பை ஆண்களும் பெண்களும் பகிர்ந்துகொள்வதற்கான மற்றுமொரு தெரிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.