ரஷ்ய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ; இலங்கைத் தூதரகம்
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்டகாலக் கடனுதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல் , ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே, ரஷ்யாவின் பிரதி நிதி அமைச்சர் மஸ்கிமோவ் திமுர், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகர்யான் மற்றும் ஏனைய நிதி மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
நீண்டகாலக் கடன் திட்டம்
இதன்போது இக்கட்டான நேரத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு, இவ்வாறான கடனுதவிகளின் முக்கியத்துவத்தை ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே வலியுறுத்தியுள்ளார்.
நீண்டகாலக் கடன் திட்டத்தின் கீழ் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் அந்நாட்டின் நிதி அமைச்சருடன் நீண்ட தீர்க்கமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு போதுமானளவு எரிபொருள் விநியோகத்தை போட்டி விலையில் கிடைக்கச் செய்வதற்கு இந்த கடன் வசதி திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனக் இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.