ஜனாதிபதி ரணிலை கொல்ல சதி: ஊடக அறிக்கையை மறுத்த பொலிஸார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தனியார் வானொலியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது.
இலங்கையில் உள்ள அரசியல் கட்சியொன்றை சேர்ந்த குழுவொன்று இது தொடர்பில் வெளிநாடுகளில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக இன்று (28-02-2023) வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வார காலத்திற்குள் இந்த படுகொலை முயற்சியை மேற்கொள்வதற்கு குழு திட்டமிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் எந்தவொரு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
