யாழ் மாவட்ட செயலர் விடுத்த ஆறுதல் அளிக்கும் தகவல்!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் யாழ்.மாவட்டதில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இந்நிலையில் , மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்டத்தின் சமகால நிலமைகள் தொடர்பாக இன்று மாவட்டச் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில்,
யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற போக்கு சற்று குறைவடைந்து காணப்படுகின்றது.
அதன்படி யாழில் நேற்று 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ள அதேவேளை 5641 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.