தேர்தல் களத்தில் குழப்பம் : வாக்களிக்க மறுக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட பலர்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு மண்டபத்துள் தன்னை அனுமதிக்கவில்லையென சசிகலா ரவிராஜ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் மகளிர் அணியின் செயலாளர், உப செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் சூடுபிடித்து வருகிறன்றது.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21.01.2024) நடைபெறும் குறித்த தேர்தலின் வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையால், தேர்தல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.