தீயுடன் சங்கமமானது பிபின் ராவத் - மதுலிகா ராவத் பூதவுடல்கள்
உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உடல்கள் பீரங்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தீயில் சங்கமமானது.
உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின்ராவத்திற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் தூதர்கள், இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் இராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வில் பிபின் ராவத்தின் இரு மகள்கள், குடும்பத்தினர், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங், இராணுவ அதிகாரிகள் உள்ளிடோர் பங்கேற்றனர்.
இறுதி அஞ்சலியில் இசை அஞ்சலி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச்சடங்குகளை தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க செய்தனர்.
அதன் பின்னர் கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் பூதவுடல்கள் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டு பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றி அவரது மகளிடம் முறைப்படி இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
பின்னர் தகன மேடையில் பிபின் ராவத் உடலுக்கு மற்றும் தாய் மதுலிகாவுக்கும் அவரது மகள்கள் இறுதி சடங்குகளைச் செய்ததை தொடர்ந்து ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டு உடலுக்கு மகள்கள் தீ மூட்டினர்.
இதன்போது முழு இராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கிக் குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதை யுடன் பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.

