2 அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று (8) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு (103), 92 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழுநிலை விவாதத்தின் முடிவில், இன்று மாலை 6:50 மணியளவில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பிற்காக வாக்கெடுப்பைக் கோரினார்.

அதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில், செலவினத் தலைப்பிற்கு சாதகமாக 101 வாக்குகளும், எதிராக 09 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் (225) செலவினத் தலைப்பு தொடர்பாகவும் வாக்கெடுப்பைக் கோரினார்.
இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் மற்றும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செலவினத் தலைப்புகள் மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.